தெனாலிராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் பிரபலமான கார்லபதி தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் ஒருவர்.
ஏழைப் பிராமணர்
தெனாலி ராமன் ஆந்திரமாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கார்லபதி என்கிற கிராமத்தில் இராமையா – லட்சுமி அம்மாள் தம்பதியரின் மகனாக ஏழைப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தெனாலியில் உள்ள இராமலிங்க சுவாமியின் நினைவாக இராமலிங்கன் என்றே பெயரிடப்பட்டார். இவர் பிறந்து மூன்றாம் நாள் இவருடைய தந்தையார் மரணமடைய குடும்பம் வறுமையில் வாடியது. இவருடைய தாயார் இவரை எடுத்துக் கொண்டு தெனாலியில் இருந்த அவருடைய சகோதரனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தார். தாய்மாமன் ஆதரவில் தான் இராமலிங்கம் வளர்ந்தார்.
அகடவிகட கோமாளித் தனங்கள்
உரியபருவத்தில் பள்ளியில் சேர்ந்தாலும் படிப்பில் கவனம் செல்லவில்லை அவருக்கு. அகடவிகட கோமாளித் தனங்களில் தான் அவருடைய அறிவும் ஆற்றலும் ஜொலித்தன. கமலா என்கிற பெண்ணை மணந்தார் தெனாலி ராமன்.
விகடகவியாக உயர்ந்தது
இவர் அரசவை விகடகவியாக உயர்ந்தது குறித்து பலகதைகள் நிலவுகின்றன.
இவருடைய ஊருக்கு வந்த துறவி ஒருவர் இவருடைய தைரியம் மற்றும் நகைச்சுவை உணர்வில் கவரப்பட்டு காளிதேவியிடம் வரம் பெறத்தக்க மந்திரம் சொல்லித் தந்ததாகவும் அதன் அருளால் காளி தேவியின் தரிசனம் பெற்ற தெனாலிராமன் அவளையும் தன் நகைச்சுவை அறிவால் சிரிக்க வைத்து அவளாலேயே விகடகவி என்று வாழ்த்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
அதில் நம்பிக்கை வரப்பெற்ற தெனாலிராமன் விஜயநகரம் சென்று தன்னுடைய சாமர்த்தியத்தால் அரச தரிசனம் பெற்று தன் அறிவுக் கூர்மை மற்றும் நகைச்சுவையால் அரசரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாகி அரசவையில் முக்கிய இடம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்.
உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகச் செய்தி
உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாகச் செய்தி பரப்ப வைத்து தான் இறந்து விட்டால் அரசர் தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள மாட்டார் என்பதை அரசரே உணரும் வண்ணம் செய்து அவரையே தர்மசங்கடப் படுத்தி இருக்கிறார் தெனாலி ராமன். அதனாலேயே நிஜமாகவே பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருந்த தெனாலி ராமன், கடைசியாக அரசரைப் பார்த்து விட எண்ணி அவருக்குத் தகவல் அனுப்பிய போது அவர் அதனை நம்ப மறுத்து விட்டார். அரசரைப் பார்க்காமலேயே உயிர் துறந்தார் தெனாலி ராமன்.