மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர்.
மக்களாட்சியின் வரலாறு
உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று மிகப்பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க விடுதலைப்போர்,பிரெஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி மற்றும் இந்திய சுதந்திரப்போர் ஆகியவை மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது.
மக்களாட்சியின் பொருள்
மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ்(Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்குமக்கள் என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்.
"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுகிறார்.[1]அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்றும் கூறுகிறார். [1][2]"மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன்கூறுகிறார்.
மக்களாட்சியின் வகைகள்
மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன.
நேரடி மக்களாட்சி
நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர்.
பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது.
20ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும்.
மறைமுக மக்களாட்சி
மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் சார்பாளிகளைத் (பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுக்கின்றனர். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
Source : wikipedia